அரசியல்

ஆளுநர் திமிராகப் பேசியிருக்கிறார் - அமைச்சர் உதயநிதி காட்டம்

Staff Writer

நீட் விவகாரத்தில் மக்களின் மனநிலையை அறியாமல் ஆளுநர் இரவி திமிராகப் பேசியுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கும் நிகழ்வு இன்று காலையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, நீட் விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திவருவதாகவும், முதலமைச்சரும் தானும் ஒன்றிய அரசிடம் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். முன்னர், தான் டெல்லி சென்றபோது, ”பாரத பிரதமரிடம் இதை வலியுறுத்தினேன்” உதயநிதி தெரிவித்தார்.

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிவிப்போடு வெறும் செங்கல்லை மட்டும் வைத்துவிட்டு போய்விட்டீர்களே...சீக்கிரம் கொண்டுவாருங்கள் என தொடர்ந்து சொல்லிவருகிறோம். சிலரோ மருத்துவமனையே கட்டியாயிற்று... இத்தனை பேர் பயன்படுவதாகவெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அயோக்கியத்தனமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்றவரிடம், நீட் தேர்வு விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கையில், “ இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் ஜெகதீசுவரனும் அவரின் தந்தையும் இறந்துபோய் விட்டார்கள். வருந்தக்கூடிய விசயம். ஒன்றிய அரசு இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நாம் நீட் வேண்டாமெனச் சொல்லிவருகிறோம். 2 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்து இருக்கிறோம். இங்கு இருக்கும் ஆளுநர் மக்களின் மனநிலையைப் பற்றித் தெரியாமல், அவர் ஒரு தனி உலகத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில்கூட மாணவரின் தந்தை பேசியதற்குகூட, கண்டிப்பாக நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என அவ்வளவு திமிராகப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே அவர்களின் அறியாமை வெளிப்படுகிறது. திமுக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு அது ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். முதலமைச்சர் உறுதுணையாக இருப்பார். மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தவறான முடிவை எடுக்காதீர்கள்.” என்றும் அமைச்சர் உதயநிதி கூறினார்.