உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தது தொடர்பாக, உயர் நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க உள்ளது.
மறைந்த கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டுவரை, போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பணியாற்றினார். அப்போது அவர் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவரின் மீதும் அவரின் மனைவி விசாலாட்சி மீதும் வழக்கு பதியப்பட்டது.
பொன்முடி, விசாலாட்சி இருவரும் 3 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 66 ரூபாய் மதிப்புடைய சொத்துகளை வாங்கியதாக, ஊழல் தடுப்பு காவல்துறையினரால் 2002ஆம் ஆண்டில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி வந்தபிறகு, வழக்கு விசாரணை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் போதுமான ஆதாரம் இல்லாததால் இருவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு அளித்தார்.
இந்த நிலையில், அவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவியை விடுவித்தது பற்றி, சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க உள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்கிறார்.