செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வீடு 
அரசியல்

செந்தில் பாலாஜி தம்பி வீடு முடக்கம் - அமலாக்கத் துறை விளக்கம்

Staff Writer

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்தை முடக்கியது ஏன் என அமலாக்கத் துறை விளக்கம் அளித்திருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறது. ஏற்கெனவே அவருடைய அலுவலகம், வீடு, நண்பர்கள், உறவினர்களின் இடங்களில் அமலாக்கத் துறை தேடுதல் சோதனைகளை மேற்கொண்டது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியிடம் நேற்று நான்காவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. நாளை 12ஆம் தேதி அவரிடம் விசாரணை முடிவடையும்.

இதனிடையே, கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டிவரும் பெரிய வீடு அடங்கிய சொத்து அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அசோக்குமார் கரூரில் சேலம் புறவழிச் சாலையில் 2.49 ஏக்கர் பரப்பில் பெரிய வீடு கட்டிவருகிறார்; வீட்டு மனை அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கிறது; நிர்மலாவுக்கு அவரின் தாயார் இந்த நிலத்தை அன்பளிப்பாகத் தந்தார் என்று கூறப்பட்டுள்ளது; ஆனால் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்து 10 இலட்சத்துக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் பழைய நகைகளை விற்றதில்தான் இந்தத் தொகை கிடைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டது; இது நம்பும்படியாக இல்லை.” என்றும்,

“இதற்கு விளக்கம் கேட்பதற்காக அசோக்குமார், நிர்மலா, அவரின் தாயார் இலட்சுமி ஆகியோருக்கு பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர்கள் நேரில் வரவில்லை. இதனால்தான் அந்தச் சொத்து முடக்கிவைக்கப்பட்டுள்ளது.” என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.