சனாதன சர்ச்சை விவகாரத்தில் பா.ஜ.க.வின் தகவல்தொழில்நுட்ப அணியின் அகில இந்தியத் தலைவர் அமித் மாளவியா, ராமச்சந்திர சாமியார் மீது மதுரை, திருச்சியில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
சனாதன சர்ச்சை தொடர்பாக, அமைச்சர் உதயநீதி மீது புதுதில்லி, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களிலும் இப்படி வழக்குப்பதியும்படி புகார் தந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்து அவரின் படத்தைக் கொளுத்திய உத்தரப்பிரதேச சாமியார் ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் என்பவர், அந்தக் காட்சியை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட பியூஸ்ராய் எம இருவர் மீதும் 153, 153A (1)(a), 504, 505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சியிலும் இன்னொரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டாம் தேதி சனாதன தர்மத்தைப் பற்றி பேசிய காணொலியை, பாஜகவின் அகில இந்திய தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, உதயநிதியின் பேச்சைத் திரித்து, சனாதனத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களின் இனப்படுகொலைக்கு உதயநிதி அழைத்து கொடுத்துள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவிற்கு அமைச்சர் உதயநிதி தான் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் சாதி மதப் பாகுபாடு இருக்கிறது என்றும் சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தான் பேசிவருவதாகவும், டெங்கு, மலேரியா, கொரோனா மக்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதனம் சமூகத்தீங்கு உண்டாக்குகிறது என்றும் எனவே இது போன்ற பொய்ச் செய்திகளை பதிவிடுவதை நிறுத்தவேண்டும் என்றும் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
உதயநிதி தன் பேச்சில் சாரத்தை தெளிவாக பதில் அளித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்துடனும் அரசியல் சுய லாபத்திற்காகவும் உதயநிதியின் பேச்சை வேண்டுமென்றே திரித்து தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையிலான மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும்வகையிலும் சகோதரத்துவத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் மாளவியா, அவர் தலைமையில் உள்ள பாஜக அகில இந்திய தகவல் தொழில்நுட்ப அணி இந்த பொய் செய்தியை ப்பரப்பி வருகின்றனர் என்றும் இதில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே கே வி தினகரன் இன்று திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதன்படி, மாளவியா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் நோக்கோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 ஏ( வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை வளர்த்தலும் ஒற்றுமைக்குக் குந்தகமான செய்கைகளைச் செய்தலும்), 504 (உட்கருத்துடன் வேண்டுமென்றே அமைதியின்மையை நிந்திப்பது, 505 (1) பி, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின்படி வழக்கு பதியபட்டுள்ளது.” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.