உள்துறை அமைச்சர் அமித்ஷா 
அரசியல்

ஐபிசி உட்பட 3 சட்டங்கள்... இந்திய- பாரதிய என்றும் மாற்றம்- அமித்ஷா

Staff Writer

இந்திய தண்டனைச் சட்ட ம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றியமைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இதற்கான சட்ட வரைவுகளை அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய அவர், பிரிட்டன் ஆதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள், அந்த ஆதிக்கத்தைப் பாதுகாக்கவும் வலுவூட்டவுமே பயன்பட்டன என்றும் நீதியை வழங்குவது அல்லாமல், தண்டனை அளிப்பதாகவே இவை இருக்கின்றன என்றும் இவை மாற்றியமைக்கப்படும் என்றும் கூறினார்.

பழைய சட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம், இந்தியக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உள்ளுணர்வாக புதிய சட்டங்கள் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய சட்டங்களின் குறிக்கோள், தண்டனை அளிப்பது அல்ல, மாறாக நீதியை வழங்குவது; குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வையும் உருவாக்க வேண்டும் என்பதும் ஆகும் என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆனால், சட்டங்களை மாற்றுகிற கையோடு, அவற்றின் பழைய பெயர்களில் இருந்த இந்திய எனும் சொல்லையும் மாற்றி பாரதிய என்பதை புதிய சட்டத்தில் கொண்டுவந்திருப்பது, விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிசி, சாட்சியச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றை, பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்கிதா, பாரதிய சக்‌ஷியா என்கிற பெயர்களில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.