திரைப்படங்கள் சாதியப் பிரச்னைக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பெசண்ட் நகரில் இன்று முற்பகல் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் சாதியை வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கவிஞர் வைரமுத்து, விரிவான விளக்கம் அளித்தார்.
” திரைப்படங்களை எடுப்பவர்கள் சாதியை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால் சாதியை வலியுறுத்தி எடுக்கப்படுகிற படம், வணிகரீதியாக வெற்றி பெறுவதில்லை. எல்லா சாதி மக்களும் ஒரு திரைப்படத்தைப் பார்த்தால்தான் அந்தத் திரைப்படம் வெற்றி பெறும். குறிப்பிட்ட சாதிக்காக எடுக்கப்படும் படம் அந்தக் குறிப்பிட்ட சாதி மக்களின் எண்ணிக்கையில் நின்றுபோகும். இதனால் ஒரு திரைப்படத்தை தயாரிப்பவர், இயக்குகிறவர், நடிக்கிறவர் குறிப்பிட்ட சாதிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்வது இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்று மட்டும் புரிந்துகொண்டால், அங்கு சாதி தலைதூக்காது.” என்று வைரமுத்து கூறினார்.
பெரியாரைப் போல திராவிடக் கட்சிகள் சாதி ஒழிப்பில் முனைப்பு காட்டவில்லையா என்று ஒருவர் கேட்டதற்கு, “ திராவிடக் கட்சிகள் சாதி ஒழிப்பதில் முனைப்பு காட்டியிருக்காவிட்டால், இந்த அளவு முன்னேற்றம்கூட வந்திருக்காது. சாதி ஒழிப்பில் போதுமான அளவு நாம் வெற்றிபெற வில்லை என சொல்லமுடியுமே தவிர, முனைப்பு காட்டவில்லை என்று கூறமுடியாது. வெளிநாடுகளில் கரீனா கபூர், கல்பனா ஐயர் என பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி உண்டா?” என்று வைரமுத்து எதிர்க்கேள்வி எழுப்பினார்.