அரசியல்

2021 வெல்லப் போவது யார்?

திவ்யபிரபந்த்

இந்த தேர்தல் எப்படியானது ? யார் வெல்லப் போகிறார்கள் ? என்ற இரண்டு கேள்விகளுக்கு பதில் காண்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

எப்படியானது ?

'வாழ்க வசவாளர்கள்' என்பது அறிஞர் அண்ணா பயன்படுத்திய சொற்றொடர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடந்தது. அதிமுக ஆட்சி இன்னும் ஐந்தாண்டுகள் தொடரவேண்டுமா? இல்லை இதோடு முடிய வேண்டுமா என்பது தான் பிரதான கேள்வியாக இருக்க வேண்டும்.

தலைவர்களின் பேச்சுகளின் உண்மை நிலவரத்தை உற்று பார்த்தால் தலைசுற்றுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளில் ஒன்று, ‘தமிழகத்தின் பொருளாதாரத்தை ஆண்டுதோறும் 10 -20% உயர்த்தி, அடுத்த 10 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் (சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்) என்கிற அளவுக்கு உயர்த்துவோம்'. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த கமல், ‘தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது கனவோ, நிறைவேற முடியாத விஷயமோ அல்ல. மகாராஷ்டிரா மாநிலம் அதைச் செய்திருக்கிறது. அம்மாநிலம் ஒரு ட்ரில்லியன் டாலர் என்பதைத் தொட்டு பல ஆண்டுகளாகிவிட்டது' என்று சொல்லியிருந்தார். கடந்த ஆண்டு  மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் (ஜிடிபி )440 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான்! ( ட்ரில்லியனைப் பிடிக்க இன்னும் நாள் ஆகும். ஆயிரம் பில்லியன் ஒரு ட்ரில்லியன்! )  தமிழகத்தின் பொருளாதாரம் (ஜிடிபி ) 300 பில்லியன் டாலர்கள்! சினிமாவில் பார்த்து பார்த்து கட்சிகளை செதுக்கும் கமல் பலமாக இடறிய இடம் இது. சினிமாவில் ரீ டேக் உண்டு, அரசியலில்..?

இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள பல நிறுவனங்கள் தங்களின் தலைமையிடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைத்திருப்பதால் அம்மாநிலத்தின் பொருளாதாரம் (ஜிடிபி ) உயர்வாக உள்ளது என்பதுதான் உண்மை!

சீமானின்  பரப்புரையில் வசவுகள் மற்றவர்களை விட தூக்கலாகவே உள்ளன.

அமமுகவின் டிடிவி தினகரன் சிரித்த முகத்தோடு பிரசாரம் செய்தாலும் காரம் அதிகமாக உள்ளது.அந்தியூரில் பரப்புரையின் போது, ‘கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் போது

ரூ. ஒரு லட்சம் கோடி கடன் எப்படி வந்தது? அண்ணன் பழனிசாமி ஆட்சி நடத்தவில்லை, கமிஷன் மண்டி நடத்துகிறார். பழனிசாமியின்

சிறப்பான ஆட்சியில் குளம் தூர்வாரப்பட்டதோ இல்லையோ கஜானாவை பக்காவாக தூர்வாரிவிட்டார்கள்' என்று காட்டமாக சொன்னார்.  எல்லா கூட்டங்களிலும் மறக்காமல் துரோகிகளை வீழ்த்தவேண்டும் என்கிறார்.

மாற்றத்தை முன் வைக்கும் இந்த அணிகளில் வசவுகள் கொடி கட்டி பறக்கும் போது அதிமுக, திமுக அணிகளிலும் இதற்குப் பஞ்சமில்லை.

2021ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலில் எங்கு நோக்கினும் வசவாளர்களே அதிகமாக தென்படுகிறார்கள். ஆகவே இந்த தேர்தல் ,‘வசவாளர்களின் தேர்தல்'.

யார் வெல்லப் போகிறார்கள் ?

இந்த தேர்தலில் ஐந்து அணிகள் இருப்பதாக கூறுபவர்கள் உள்நோக்கம் உள்ளவர்கள் என்ற சந்தேகப்பட்டியலில் சேரத் தகுதியானவர்கள் என்கிறார் கட்சி சார்பற்ற பத்திரிகையாளர் ஒருவர்.

பிப்ரவரி,2018இல் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் ஒரே ஒரு தேர்தலில் பங்கேற்று 16,13,708 வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட 13 மடங்கு அதிக வாக்குகள் வாங்க வேண்டும். இது சாத்தியமில்லாதது. அவர்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

2021 தேர்தல் தங்களுக்கானது என்று 2016 தேர்தலில் 4,58,007 வாக்குகள் பெற்ற சீமானின் தம்பிகளின் நம்பிக்கை. நாடாளுமன்றத் தேர்தலில் 1,645,222 பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் இந்த முறை இல்லை. இது நமது வார்த்தைகள் அல்ல. 20&23, மார்ச், 2021  தேதியிட்ட நக்கீரன் இதழுக்கு பேட்டி கொடுத்த சீமானின் வார்த்தைகள். ‘ நாம் தமிழர் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகளை எப்படி கணக்கிட்டிருக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ‘தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி இந்த முறை 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும். அந்த நம்பிக்கையை மக்கள் எனக்கு தந்திருக்கிறார்கள்' என்று பதிலளித்துள்ளார். இது சீமானின் நம்பிக்கை. ஒரு வேளை இது நிஜமானால் கூட ஆட்சி எட்டாத கனி தான்.

அதிமுகவை மீட்பதற்கான தேர்தல் என்று களமிறங்கியிருக்கும் அமமுகவின் டிடிவி தினகரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளை விட அதிக வாக்குகளைப் பெற்றவர். அறுபது தொகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறும் அமமுகவினரின் இலக்கு  ஆட்சியைப் பிடிப்பதா? அதிமுகவை பிடிப்பதா? என்றால் மர்மப்புன்னகை பதிலாக கிடைக்கிறது. ஆனால் பதில் ஓபன் சீக்ரெட் தான்.அமமுகவின் கோபம் எடப்பாடியார் மீது தான் என்பது வெளிப்படை.

2016 ஆம் ஆண்டின்  ‘மாற்று அரசியல் முயற்சி' என்ன ஆனது என்பதும், அது யாருக்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பதும் தற்போது ஓபன் சீக்ரட் ஆன பின், பி டீம் என்ற சொற்றொடர் பீகாரை விட தமிழகத்தில் மிக பிரபலம்.

எடப்பாடி பழனிசாமியின்  கூட்டணி 2016 ஆம் ஆண்டின் கணக்கை வைத்துப் பார்த்தால் மிக பலமானதுதான்.

அதிமுக + பாஜக + பாமக (2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குகள்)- & அமமுக(நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள்) என்று கணக்கிட்டால் அதிமுக

கூட்டணி 1,88,96,410 வாக்குகள் வாங்க வேண்டும். ஆனால் அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில்( தேமுதேக மற்றும் தமாக) 1,33,07,139  அதாவது ஐம்பத்தைந்து லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றது.

ஒன்று கூட்டல் இரண்டு, மூன்றாகும் என்ற கணிதம் தோற்குமிடம் தேர்தல் களம்.

அதிமுக கூட்டணியின் தற்போதைய நிலையை 2016 சட்டமன்ற தேர்தல் நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பாஜக + பாமக கூட்டணி, மத்திய அரசின் ஆதரவு, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம், 2500 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவற்றை பழனிசாமி பலமாக கருதுகிறார்.

இதே கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் வெல்ல முடியவில்லை? வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு பலன் தரும் என்று எடப்பாடி நம்புகிறார். 10.5% இட ஒதுக்கீடு தாற்காலிகமானது என்று அமைச்சர் உதயகுமார் கூறுகிறார். தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம் உதவும் என்றும் உதவாது என்பதும் பட்டிமன்ற கதையாகிவிட்டது.

பாஜகவும், அதிமுகவில் பலரும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் உடன்பாடு வைத்துக் கொள்ள வற்புறுத்திய போது அதை போராடித் தடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவு தான் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணிக்கு எதிராக போகக் கூடிய முக்கியமான விஷயம்.

மார் 23, 2021 அன்று தினமலர் நாளிதழின் இணைய தளத்தில் வந்த செய்தி ‘ஆளும் கட்சியில், வேட்பாளர்களுக்கான, ‘ஆதரவு' நேற்று முன்தினம் இரவு, தலைமையிடம் இருந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் உலவுகிறது. கடந்த, 2016 தேர்தல் வரையிலும், கூட்டணிக் கட்சியினரை உள்ளடக்கிய தொகுதி கமிட்டி, ஒன்றிய கமிட்டி, நகர கமிட்டி, கிளை கமிட்டி போட்டு தேர்தல் வேலை நடந்தது. அந்த கமிட்டிகள் மூலம் தான் மக்களை குஷிப்படுத்தும் வேலை நடக்கும். அது சரியாக நடக்கிறதா என தலைமை கழகம் ஆள் வைத்து கண்காணிக்கும். ஆனால், இந்த முறை, வேட்பாளருக்குநேரடியாகவே, ‘ஆதரவு' வந்துவிட்டது. அதிலிருந்து அவர்கள் எவ்வளவு கொடுப்பார்கள்என்பதே தெரியவில்லை. உதார ணமாக, ஒரு வேட்பாளருக்கு, 16 ‘ஆதரவு' பெட்டிகள் வந்துள்ளன. ஆனால், அவர், வெளியில், 12 தான் வந்ததாக சொல்கிறார்.

எனக்கு இவ்வளவு தான் வந்தது என்று ஒன்றியத்திடம் அவர் குறைத்துத் தந்தால், அவரும் அப்படியே குறைப்பார். ஆக கடைசியில், 70 சதவீதம் வாக்காளர்களுக்குப் போக வேண்டியது,வெறும், 30லிருந்து, 40 சதவீதம் பேருக்குத்தான் போகும்.ஒவ்வொரு அமைச்சரை சுற்றிலும், ‘புரோக்கர் டீம்' இருப்பதால், நிர்வாகிகளால் சம்பாதிக்க முடியவில்லை. தேர்தல் நேரத்திலும் எங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் கண்டிப்பாக அதிருப்தி ஏற்படத்தானே செய்யும்...? ‘டைரக்ட் பெனிபிட் டிரான்ஸ்பர்' திட்டமெல்லாம் அரசு நலத்திட்ட பயனாளிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கட்சி நிர்வாகத்தில் இது எதிர்மறையாக வேலை செய்யும்.' என்கிறது.தினமலரில்  வந்த செய்தி பலம் வாய்ந்த தலைமை இருப்பதற்கும், இல்லாததற்கும் உள்ள வித்தியாசம். அதிமுகவின் மிகப் பெரிய பலவீனம் ஜெவும், சசிகலாவும் இல்லாதது தான் என்று தொண்டர்களும் பல தலைவர்களும் ஆதங்கப்படுகிறார்கள்.

இதற்கிடையில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும், காங்கிரஸ் / மதிமுக / விசிக வெளியேறும் என்பதான செய்திகள் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. சீட் கிடைக்காத கரூர் சின்னசாமிபோல் ஒரு சிலர் அதிமுகவுக்குத் தாவினர். இதற்கு முன் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார். இது போன்ற அதிருப்தி கதைகள் திமுகவை விட அதிமுகவில் ஒரு ஸ்பெஷல் போடுமளவிற்கு உள்ளது என்பது இன்னொரு விஷயம்!

அதிமுகவின் வெற்றி நடை தமிழக விளம்பரம், பல் முனை தாக்குதல், சமூக ஊடகங்களில் வீக்காக இருக்கிறது என்று பல விஷயங்கள் திமுக கூட்டணிக்கு எதிராக வைக்கப்பட்டது. ஆனால் இது மெல்ல தகர்வதாகவும், திமுக கூட்டணி வெற்றியை நோக்கி நடை போடுவதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரிகிறது.

தமிழக தேர்தலை ஒட்டி புதிய தலைமுறை செய்தி சேனல், ஏபிடி நிறுவனத்தோடு இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் அதிகபட்சமாக 38.51 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில்  திமுக கூட்டணி  151- 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 76 - 83 தொகுதிகளிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் மற்றும்  சி-வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி  151 - 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 45 - 53 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் 1- 5 தொகுதிகளிலும் அமமுக 1 - 5 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யூகத்தின் அடிப்படையில் சொந்த கருத்துகளை முன்வைக்க ஆசிரியர் குழு அனுமதி மறுத்துவிட்டது. இந்த கட்டுரை எழுதும் நேரம் வரை பல்வேறு கருத்துக்கணிப்புகள் மற்றும் கள நிலவரத்தின் படி அதிக தொகுதி வித்தியாசத்தில் திமுக கூட்டணியினர் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

 முன்பு எப்போதும் இல்லாதபடி அதிக அளவில் பணம் விளையாடும் என்று முன்னணி ஊடகங்கள் வெளிப்படையாக பதிவு செய்கின்றன. ஓர் ஊடகம்  பண விநியோகத்திற்கு முன்பான  கள நிலவரம் என்ற  முன்னுரையுடன் கணிப்பை வெளியிட்டுள்ளது. பணத்தால் வெல்வோம் என்ற நம்பிக்கை அதிக ஊழலுக்கு காரணமாகலாம்.

வேலைவாய்ப்பு, விலைவாசி போன்ற அடிப்படையான விஷயங்கள், சமூக பாதுகாப்பு,  உரிமைகளின் பாதுகாப்பு, எதிர்காலத்துக்கான திட்டங்கள், கஜானாவை பாதுகாப்பது,

அரசின் செலவுகளை கறாராகவும் அதிக கவனத்துடன் செலவழிப்பது போன்ற விஷயங்களின் அடிப்படையில் வேட்பாளர்களையும் ஆட்சியையும் தேர்ந்தெடுப்பது வாக்காளர்களின் கடமை. கடைசி நிமிட நாடகங்களுக்கும் இனிப்பான பேச்சுகளுக்கும் பணத்திற்கும் விலை போகாமல் வாக்களிப்பது எதிர்காலத்திற்கு நல்லது. வாக்களிக்கும் முன், பின் வரும் குறளை ஒரு முறை நினைத்துப் பார்க்கவேண்டும்.

தேரான் பிறரைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும் (குறள் 508)

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரை தேர்ந்தெடுப்பது அவர்களது அடுத்த தலைமுறையினரையும் பெரும் துன்பத்தில் தள்ளிவிடும்.

ஏப்ரல், 2021