செய்திகள்

‘வள்ளுவரும் வள்ளலாரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள்’ – ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

Staff Writer

‘பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அதில் வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் கூறியது சனாதன தர்மத்தின் எதிரொலி.

இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது ஒருவரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் தங்களது மதம் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்சனை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர். ஜி.யு.போப், பிஷப் கால்டுவெல் போன்றோரும் அதன் ஒரு பகுதி தான். நமது நம்பிக்கைகளை அழிக்க வந்தவர்கள் தான் அவர்களும். தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம்” என்றார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்கிறார் ஆளுநர். ஆளுநர் அவர்களே, வள்ளுவரும் வள்ளலாரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.