செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்!

Staff Writer

திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை மிக எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வணங்கினார்.  இதன் பிறகு தொண்டர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனால், அண்ணா அறிவாலம் விழாக் கோலம் போல் காட்சி அளித்தது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.