ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி.  
செய்திகள்

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம்!

Staff Writer

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மக்களவையில் நேற்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அது முடிந்ததும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பில் அதற்கு ஒப்புதல் கிடைத்தது.

முன்னதாக, அவையில் பேசிய ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மகாபாரதத்தைச் சுட்டிக்காட்டி, ”அரசன் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை மன்னன் சும்மா வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது; மகாபாரதத்தின் அஸ்தினாபுரமாக இருந்தாலும் மணிப்பூராக இருந்தாலும்...” என்று குறிப்பிட்டார்.

இதனால் கோபமடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம், ஆதிர் ரஞ்சனை அவையிலிருந்து விலக்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதையடுத்து பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டுவந்தார்.

அதைத் தொடர்ந்து ஆதிர் ரஞ்சன் கூறிய பல வாசகங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ஆதிர் ரஞ்சனின் இடைநீக்க விவகாரம், அவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் உரிமைக் குழு எடுக்கும் முடிவைப் பொறுத்தே இடைநீக்கம் ரத்து செய்யப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.