கரூரில் பெரியார் சிலை சுற்றி நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்கள் 
செய்திகள்

பெரியார் சிலையை சுற்றிவளைத்து நடப்பட்டிருக்கும் பாஜக கொடிக்கம்பங்கள்!

Staff Writer

கரூரில் இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பாஜக அரசின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் கரூர் - மாற்றத்திற்கான மாநாடும் நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கவனித்து வருகிறார். அவரே எல்லா பணிகளையும் முன்னின்று செய்வதாக சொல்கிறார்கள்.

விழா மேடையானது புதிய நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாழை மரத்தில் வரவேற்பு வாயிலும், ஆயிரக்கணக்கான சேர்களும் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரும் அனைத்து வழிகளிலும் பாஜகவின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அதேபோல் கரூரில் உள்ள பெரியார் சிலையை சுற்றிலும் பாஜகவின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் சமூகவலைதள வாசிகள், ’நம்ம ஆளுங்க கட்டம் கட்டிட்டாங்க. இப்படி சுற்றி வளைச்சா பாவம் அவர் என்னையா பண்ணுவார்.’ என பதிவிட்டுள்ளனர்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள அண்ணாமலை, இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவதற்கு பதிலாக, செந்தில் பாலாஜிக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவுமே அதிகம் முழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.