அமெரிக்க அதிபர் தேர்தலில் காலை 8.30 மணி நிலவரப்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவில் உள்ளார்.
மொத்தம் 50 மாகாணங்களில் 538 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 8.30 (இந்திய நேரப்படி) நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 188 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 99 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
இதுவரை வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில், இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், தெற்கு டகோடா, வடக்கு டகோடா உள்ளிட்ட 17 மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
வெர்மோன்ட், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியா, இல்லினொய்ஸ், நியூ ஜெர்ஸி, நியூயார்க் உள்ளிட்ட 9 மாகாணங்களில் கமலா வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.4 சதவிகிதமும், கமலா ஹாரிஸ் 46.4 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.
கலிஃபோர்னியா, வாஷிங்டன், அரிசோனா, ஓரிகான் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.