சமூக ஊடகம் 
உலகம்

அம்மாடியோவ்... சமூக ஊடகங்களில் இத்தனை பேரா? எது டாப்?

Staff Writer

இணையவசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 66 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. அதாவது, 535 கோடி பேர் உலக அளவில் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 1.8 சதவீதம் பேர் அதாவது 9.7 கோடி பேர் இணையப் பயன்பாட்டாளர்களாக மாறியுள்ளனர்.

சமூக ஊடகப் பயன்பாடும் கடந்த ஓராண்டில் 26.6 கோடி பேராக அதிகரித்து, மொத்தம் 500 கோடி பேரைத் தாண்டியிருக்கிறது. உலக மக்கள்தொகையில் இது 62.3 சதவீதம்.

இந்தியாவில் 82.1 கோடி பேர் இணையப் பயன்பாட்டாளர்கள் என்றாலும், அடிக்கடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 46.2 கோடி பேர்தான் என்கிறது புள்ளிவிவரம்.

அதிகமாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் எனும் போட்டியில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் முகநூல் முதல் இடத்தைத் தட்டிச்செல்கிறது. சுமார் 310 கோடி பேர் இதைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது டேட்டா ரிப்போட்டல் சர்வே அறிக்கை.

மெட்டாவின் இன்ஸ்டாகிராம், வாட்சாப், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவையும் முதல் பத்து இடத்துக்குள் வந்துள்ளன.

கூகுள் நிறுவனத்தின் யூட்டியூப் 250 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

வாட்சாப்பும் இன்ஸ்டாவும் 200 கோடி பயன்பாட்டாளர்களைப் பெற்று மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளன.

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள டிக்டாக் சமூக ஊடகமும் முன்னணிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 160 கோடி பயனாளர்களுடன் அது ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

சீனாவின் முன்னணி மெசேஜிங் செயலியான விசாட் 136 கோடி பேருடன் ஆறாவது இடத்திலும், 97.7 கோடி பேருடன் பேஸ்புக் மெசஞ்சர் ஏழாம் இடத்திலும் உள்ளன.

ரசியா, உக்ரைன், மற்ற முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, 95 கோடிப் பயன்பாட்டாளர்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

ஸ்னாப்சாட்(80 கோடி) ஒன்பதாவது இடத்திலும், சீனாவின் டோயின் (75.5 கோடி) பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram