நேற்று முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று இயற்பியல் நோபலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் ஜான் ஹோப்ஃபீல்டு, கனடாவின் ஜெஃபிரி ஹிண்டன் ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
”ஆராய்ச்சியில் பெரும் அளவிலான தரவுகளை வடிகட்டுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் இயந்திரக் கற்றலானது முக்கியமானது. ஜான் ஹோப்ஃபீல்டும் ஜெஃபிரி ஹிண்டனும் இன்றைய திறம்வாய்ந்த இயந்திரக் கற்றலுக்கான அடிப்படையை உருவாக்கினார்கள். அதற்கு இயற்பியலிலிருந்து கருவிகளைப் பயன்படுத்தி புதிய முறைமையை உருவாக்கினார்கள். இவர்கள் உருவாக்கிய செயற்கை நரம்பியல் வலைப்பின்னலின்படியான இயந்திரக் கற்றல் தற்போது அறிவியல், பொறியியல், அன்றாட வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.” என்று நோபல் குழுவின் அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1933இல் அமெரிக்காவின் சிக்காகோவில் பிறந்த ஜான் ஹோப்ஃபீல்டு, நியூயார்க்கின் கார்னல் பல்கலைக்கழகத்தில் 1958இல் முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். தற்போது நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இலண்டனில் 1947ஆம் ஆண்டில் பிறந்த ஜெஃபிரி ஹிண்டன், பிரிட்டனில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் 1978இல் முனைவர் பட்டம் பெற்றார். இப்பொது கனடாவின் தொரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.