வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது மகன் சஜீப் வாஜேத் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் நாட்டை விட்டு வெளியேறியதும், ஆட்சியை ராணுவம் கையில் எடுத்துக்கொண்டது. அங்கு விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வாக்கர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அங்கு தனது மகளை சந்தித்த பின் ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக தெரிகிறது. அதற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “வங்கதேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4ஆம் தேதியிலிருந்தே பதவி விலகுவது குறித்து எனது தாய் (ஷேக் ஹசீனா) பரிசீலித்து வந்தார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தபோது வங்கதேசம் வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை. இதற்காக கடினமாக உழைத்த அவருக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்குத் திரும்பமாட்டார்." என்று சஜீப் வாஜேத் கூறினார்.
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறியதை வங்கதேச மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.