மாண்ட்ரியாலில் உள்ள கனடா குடிவரவு அமைச்சர் அலுவலகம் 
உலகம்

படிப்பை முடிச்சிட்டு உங்க நாட்டுக்குப் போயிடுங்க!

Staff Writer

கனடா நாட்டில் சில பகுதிகளில் குடியேறி வசிப்பதற்கே ஆள் இல்லை என்கிற நிலையும் ஒரு காலத்தில் இருந்தது. அதனால் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம்தேடி கனடாவில் தஞ்சம் புகுந்துவருகின்றனர். 

ஐரோப்பிய நாடுகளைவிட அதிகமான அளவில் கனடாவுக்குள் குடியேற முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. உடனடியாக அங்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது என்றாலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு வீட்டு வசதியைச் செய்துதர வேண்டியதை அரசின் கடமையாகக் கருதும் நிலை இருக்கிறது. 

அடிக்கடி வீட்டுவசதி போதாமை, இல்லாமை பற்றி குடிமக்கள் அமைப்புகள் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும் கோரிக்கையை வலியுறுத்துவதுமாக இருந்துவருகின்றன. புலம்பெயர்ந்து கனடாவுக்குள் செல்லும் மக்களுக்கு ஆதரவாக இருந்துவரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவைக்கு இது தலைவலியாக மாறியுள்ளது. 

இதனிடையே, கனடாவுக்கு மேற்படிப்புக்காகச் செல்பவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்குவதில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் ஏற்படும் கனடாவாசிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டில் அரசாங்கம் சிக்கியுள்ளது.

இந்தப் பின்னணியில், கனடாவுக்கு வரும் பன்னாட்டு மாணவர்களின் விசாக்களைக் குறைக்க அரசு தீர்மானித்துள்ளது. பன்னாட்டு விசாவில் படிக்கவரும் மாணவர்கள் படிப்பை முடித்தபிறகு தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் செல்லவேண்டும் என குடிவரவுத் துறை அமைச்சர் மார்க் மில்லர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

இதனிடையே, மாண்ட்ரியாலில் உள்ள குடிவரவு அமைச்சரின் அலுவலகம் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்- காசா போர் தொடர்பான போராட்டங்கள் இந்த இடத்துக்கு அருகில் நடைபெற்றுவருவதால், அதற்கும் இச்சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என நகர காவல் துறை விசாரித்துவருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram