ஆடுகளுக்கு அருமையான கவனிப்பு, கலிபோர்னியா, அமெரிக்கா 
உலகம்

உண்மைதானுங்க... ஆடு மேய்க்கும் அரசாங்கம்!

Staff Writer

ஆடு மேய்க்கத்தான் லாயக்கு என்பதெல்லாம் இன்றைய நகரத்துப் பிள்ளைகளுக்கு தெரியாமலும் இருக்கலாம். ஆனால் கிராமங்களில் இன்றும் சொல் வழக்கு நீடிக்கிறது.

இப்படிச் சொல்பவர்கள் இனி அதேபோல சொல்ல யோசிக்கவேண்டும் என ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவில்!

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாடினோ கவுண்டியில் உள்ள மலைப்பகுதியில் இந்தியர் எனப்படும் பூர்வகுடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இங்குள்ள வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் நாசத்தையும் உண்டாக்குகிறது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள், சிறு விமானங்களைப் பயன்படுத்தி வந்தாலும் காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்தச் சூழலில், சான் பெர்னாடினோ மலைப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் இயற்கை வழியில் காட்டுத் தீயைத் தடுக்கும் திட்டத்தை சான் மேனுவல் தீயணைப்புத் துறை ஆரம்பித்துள்ளது.

கோடைகாலமான தற்போது எளிதில் தீ பிடிக்கவும் பரவவும் காரணமாக இருக்கும் காய்ந்த புல், புதர்ச்செடிகளை ஆடுகளை விட்டு மேயவிடுவதுதான், இந்தத் திட்டம். சுமார் 400 ஆடுகள் என்பது இப்போதைய கணக்கு.

அடுத்து வரும் சில மாதங்களில் இப்படி ஆடுகளை மேயவிட்டால் குறிப்பிட்ட பகுதியில் காய்ந்த புல்பூண்டு எதுவும் இருக்காது; தப்பித்தவறி தீ உண்டானாலும் அதிக அளவில் சேதமாகாதபடி பாதுகாக்க முடியும் என்று அழுத்தமாகச் சொல்கின்றனர், சான் மேனுவல் தீயணைப்புத் துறையினர்.

அவ்வப்போது தீ விபத்துகள் தொடர்ந்தாலும், கடந்த 2003ஆம் ஆண்டில் இந்த மலைப்பகுதியில் 18ஆவது நெடுஞ்சாலைப் பகுதியில் வாட்டர்மேன் கேன்யான் எனும் பகுதியில் பெரும் நாசம் நிகழ்ந்தது. சுமார் 140 சதுர மைல் அதாவது 91 ஆயிரம் ஏக்கர் பரப்பு தீக்கிரையானது.

இந்த மாதிரியான புதிய திட்டங்கள் அப்படியான துயர நிகழ்வுகளை மீண்டும் நடக்கவிடாதபடி தடுக்கமுடியும் என்று தொடங்கியிருக்கிறார்கள்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், காய்ந்த புல்பூண்டுகளை மேயும் ஆடுகளுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், அவற்றை தீயணைப்புத் துறையினர் செமையாக கவனிக்கிறார்கள். வாழைப்பழம் என்ன, தர்பூஸ் என்ன, திராட்சை அதிலும் கருப்பு, பச்சை என வகைவகையாக, ஆப்பிள், செர்ரி, பப்பாளி, குடை மிளகாய் என ஆடுகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்!