மகிந்த ராஜபக்சே 
உலகம்

இலங்கையில் திருப்பம்- ராஜபக்சே கட்சி போட்டி!

Staff Writer

இலங்கையில் அரசியல் நெருக்கடியால் அதிபரான ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்காலம் முடிவதையொட்டி, புதிய அதிபரைத் தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் அந்நாட்டுத் தேர்தல் துறை வெளியிட்ட அறிவிப்பில், வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

முறைப்படியான தேர்தல் நடைமுறைகள் அறிவிப்புக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன. 

தற்போதைய அதிபர் ரணிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும், தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளரும் போட்டியிடுவது இதுவரை உறுதியாக இருந்தது. 

நாட்டின் செல்வாக்கான அரசியல் சக்தியான ராஜபக்சே குடும்பத்தின் முன்னாள் அதிபர் கோட்டா பய ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் எழுச்சியால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, நாட்டைவிட்டே வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது. 

அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சேவைத் தவிர, அரசுப் பதவிகளில் வேறு யாரும் முக்கியமான இடத்தில் இடம்பெறவில்லை. 

வரக்கூடிய அதிபர் தேர்தலிலும் அக்குடும்பத்தைச் சேர்ந்த யாரும் நேரடியாகப் போட்டியிட மாட்டார்கள் என்றும் ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி வேறு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மட்டுமே செய்யும் எனக் கூறப்பட்டுவந்தது. 

இந்த நிலையில், சீனாவுக்கு நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் சென்றுதிரும்பிய மகிந்த ராஜபக்சே, நேற்று கொழும்பில் ஊடகத்தினரிடம் பேசுகையில், இலங்கை பொதுமக்கள் முன்னணி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்திப்பார்ப்போம் என்று கூறினார். 

அவரின் இந்த அறிவிப்பு அதிபர் தேர்தல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.