அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக அதிகாரபூர்வமான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ். அக்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிலிருந்து விலகிய பின்னர், கமலா ஹாரிஸையே அவர் முன் மொழிந்தார். ஜனநாயகக் கட்சியின் பிற முக்கிய பிரமுகர்களும் ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவு பெருகியது. முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தன் ஆதரவை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.
இதையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ’ இன்று நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்கும் படிவங்களில் கையெழுத்திட்டேன். ஓவ்வொரு வாக்கையும் பெற கடினமாக உழைப்பேன். வரும் நவம்பரில் மக்கள் ஆதரவு பெற்ற நம் அணி வெல்லும்’ என்றார்.
முன்னதாக கமலாவுக்கு தன் ஆதரவைத் தெரிவித்த பாரக் ஒபாமா, ‘ கமலா, அமெரிக்காவின் அருமையான அதிபராக இருப்பார்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
நவம்பர் 5 அன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ட்ரம்பும் கமலாவும் மோதுகிறார்கள்.