இலெபனான் நாட்டில் இருந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இன்று தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். செவ்வாயன்று பேஜர் கருவிகளிலும் புதனன்று வாக்கிடாக்கிகளிலும் வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் அனைத்தையும் மீறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் இருந்து புலம்பெயர்க்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மீண்டும் வடக்குக்குத் திரும்பமுடியாது என்றும் காசா மீதான இஸ்ரேலின் யுத்தம் முடியும்வரை அவர்கள் நாட்டுக்குத் திரும்பமுடியாது என்றும் அவர் கூறினார்.
வடக்கு இஸ்ரேலிலிருந்து 60 ஆயிரம் குடிமக்களை அந்நாட்டு அரசு இடம்பெயர்த்தது. அந்தப் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியதுதான் காரணம் எனும் நிலையில், அவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்தமுடியாது என சவாலாகச் சொல்வதாக நஸ்ரல்லா கூறினார்.
காசா, மேற்குக் கரையின் மீதான போரை நிறுத்துவதுதான் ஒரே வழி என்றும் அவர் இஸ்ரேல் தரப்புக்கு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.