கனடாவில் பேஸ்புக் தடையால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய ஆய்வு 
உலகம்

கனடாவில் எகிறும் மீம்ஸ்கள் - ஃபேஸ்புக் விவகாரத்தால் வந்த வினை!

Staff Writer

கனடா நாட்டில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் அங்கு முகநூலில் அரசியல் மீம்ஸ்களின் அளவு பெருகியுள்ளது.

கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பேஸ்புக்-முகநூல் உட்பட்ட சமூக ஊடக நிறுவனங்களில் அந்தந்த நாட்டு ஊடகங்களின் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், செய்திகளை உருவாக்கும் ஊடகங்களுக்கு முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் ஆகியவை பணம் தருவதில்லை. இதனால், அந்த நாட்டு ஊடகங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைவதாக பிரச்னை எழுந்தது.

அதையடுத்து, முதலில் கனடா அரசு கடந்த ஆகஸ்ட்டில் சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் நாட்டு செய்திகளை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என அறிவித்தது. கனடிய அரசின் அந்த அறிவிப்பால் கதிகலங்கிய மெட்டா நிறுவனம், தீவிர ஆலோசனையில் இறங்கியது. ஒரு கட்டத்தில் கனடிய செய்தி நிறுவனங்களின் செய்திகளுக்காக பணம் தருவதைவிட, அந்தச் செய்திகளையே வெளியிடுவதில்லை எனத் தீர்மானித்தது.

கனடாவில் குறிப்பிட்ட ஒரு செய்திக்கான இணைப்பைச் சொடுக்கினால், பார்வையாளரின் கணினியில் ஒரு திரைச்செய்தி தோன்றுகிறது. அதில், கனடிய அரசின் சட்ட விதியால் இந்தச் செய்தியைப் பகிரமுடியாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் 2021ஆம் ஆண்டு செய்தி வெளியீட்டுச் சட்டம் ஒன்றின் மூலம், இப்படியான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதையொட்டி, அங்கு குறிப்பிட்ட சில செய்திகளை பேஸ்புக்-முகநூல் நிறுவனம் வெளியிடுவதை நிறுத்தியது.

இதன் காரணமாக, கனடாவில் தீவிரமான- பிரச்னையாகும்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

அரசியல்ரீதியான செய்திகள் இருந்த இடத்தில் இன்று மீம்ஸ்கள் வந்து குவிகின்றன; உண்மையான செய்தித் தன்மை போய் உறுதிப்படுத்த முடியாத தகவல்களும் பகடிசெய்யும் படங்களுமாக நிரம்பிவழிகின்றன என்கிறார், இரண்டில் ஓர் ஆய்வைச் செய்த டெய்லர் ஓவன். இவர், மெக்ராகில் பல்கலைக்கழக ஊடக மையத்தின் நிறுவனராக இருக்கிறார்.

கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் உறுதித்தன்மையான செய்திகள் இல்லாமல் போவதும் வெற்றுக் கருத்துகள், ஆதாரம் இல்லாத தகவல்கள் அதிகமாவதும் சாதாரணமானது அல்ல.

ஒரு கட்டத்தில், கனடாவில் பேஸ்புக்-முகநூல் செய்திப் பதிவுகளுக்காக நாள் ஒன்றுக்கு 50 இலட்சம் முதல் 80 இலட்சம்வரை பார்வைகளைப் பெற்றது உண்டு. அந்தக் கதையெல்லாம் இப்போது மலையேறிவிட்டது என்கிறது, மெக்ராகில் பல்கலைக்கழகம், டொரண்டோ பல்கலைக்கழகத்தின் கூட்டுத் திட்டமான ஊடகச் சூழல் கண்காணிப்பகம்.

இதேவேளையில், பக்கச்சார்பான கருத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகத்தினர் உட்பட்ட அரசியல் பிரபலங்களின் செல்வாக்கு கொஞ்சமும் குறையவில்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

செய்திப் பதிவுகளை ஒப்பிட படங்களுடன் வெளியிடப்படும் பதிவுகளுக்கான எதிர்வினை மூன்று மடங்குவரை அதிகரித்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் பேஸ்புக்-முகநூல் செய்திப்பதிவுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டதற்குப் பிந்தைய 90 நாள்களில், நம்பகமில்லாத பதிவுகளுக்கான வரவேற்பு 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. தடை விதிக்கப்படுவதற்கு முந்தைய 90 நாள்களில் இதுவே 2.2 சதவீதமாக இருந்துள்ளது.

இது உண்மையில் மிகவும் மோசமானது என்கிறார், நியூயார்க்கை மையமாகக் கொண்ட நியூஸ்கார்டு எனும் சரிபார்ப்புக் குழுவின் இணை அதிகாரி கார்டன் குரோவிட்ஸ். குறிப்பாக, தேர்தல் சமயத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் போலியான படங்கள், ஒலி, காணொலி துணுக்குகள் அதிகரித்துவருவது பளிச்செனத் தெரிகிறது என்கிறார், அவர்.

கனடிய மரபு விவகாரங்கள் துறை அமைச்சர் பாஸ்கல், மெட்டாவின் இந்த முடிவு கெடுவாய்ப்பானதும் பொறுப்பற்றதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் உதவி கருவூல அதிகாரி ஸ்டீபன் ஜோன்ஸ் இந்த ஆய்வையொட்டி கருத்து கூறுகையில், ”ஏற்கெனவே மெட்டா நிறுவனத்துக்கு அரசாங்கம் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிட்டது. எங்கள் நாட்டு செய்தி நிறுவனங்களுக்கு அவற்றின் செய்திகளுக்கான சன்மானத்தை அது அளித்தாக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களின் நம்பகத்தன்மையில் அந்த நிறுவனமே ஈடுபாடு காட்டவேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

கனடாவில் முகநூலைப் பயன்படுத்துவோரில் ஐந்தில் நான்கு பேர் இருக்கையில் அவர்களில் 51% பேர் இந்தத் தளத்தின் மூலமாகவே கடந்த ஆண்டில் செய்திகளைப் பெற்றுவந்துள்ளனர் என்பது ஊடகச் சூழல் கண்காணிப்பகத்தின் புள்ளிவிவரம்.

ஆஸ்திரேலியாவில் மூன்றில் இரண்டு பேர் முகநூலைப் பயன்படுத்தும் நிலையில் அவர்களில் 32% பேர் கடந்த ஆண்டில் செய்திக்காகப் பார்த்துள்ளனர் என்கிறது கான்பெரா பல்கலைக்கழகம்.

எப்படியோ, கூகுள் நிறுவனமானது முகநூலைப் போல எந்தப் பிணக்கும் பண்ணாமல், நல்ல பிள்ளையாக கனடிய அரசு கூறியதைப் போல, செய்தி நிறுவனங்களுக்கான அரசு நிதியத்துக்குப் பங்களிப்பதாகத் தெரிவித்துவிட்டது.