பருவநிலை தப்புதல் காரணமாக மேற்குலக நாடுகளில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களாக தொடர்ந்துவரும் காட்டுத் தீ சம்பவங்களால் பத்தாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர வேண்டியுள்ளது.
இந்த சூழலில், கணினி நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான் வேலி அமைந்துள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா தொடர்பாக அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அங்கு இப்படியான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது பொதுமக்களும் தன்னார்வலர் குழுக்களும் பாதுகாப்பாக இருந்துகொள்வதற்கு சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் குறிப்பாக பேஸ்புக் முகநூலில் காட்டுத் தீ, சூறாவளிக் காற்று சம்பவங்களின்போது வெளியிடப்பட்ட எச்சரிக்கை, மீட்பு, உதவித் தகவல்களை திடீர் திடீரென முகநூல் நிர்வாகம் நீக்கிவருகிறது.
மூன்று மாதங்களில் இந்தப் பகுதியில் மட்டும் குறைந்தது 20 சிறிதும் பெரிதுமான காடடுத் தீ சம்பவங்களில், முகநூல் நிர்வாகம் இப்படி பதிவுகளை நீக்கி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது, இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய தனியான பக்கங்களை நடத்திவரும் சில தன்னார்வலர்களின் ஆபத்து உதவிப் பதிவுகளையே நீக்கியுள்ளது. அதாவது, சம்பவம் நிகழ்ந்ததும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு போகச்சொல்லும் அறிவிப்புகள், உணவு, மருந்து, பிற அடிப்படைத்தேவைகள் கிடைக்கும் இடங்களைத் தெரிவிக்கும் பதிவுகளையும் முகநூல் நீக்கியுள்ளது.
காரணம், குறிப்பிட்ட பதிவுகளை அதிகம் பேரின் விருப்புகளையும் பகிர்வுகளையும் பெற்று தவறான வழியில் பயன்படுத்துவதாக முகநூல் தெரிவித்துள்ளது. மேலும், முகநூலின் நெறிமுறைகளை மீறும்வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தன்னார்வலர்கள் எந்த வணிக நோக்கமும் இல்லாமல், இயற்கைச் சீற்றங்கள் குறித்து தங்கள் நேரத்தை ஒதுக்கி தகவல்களை வெளியிட்டுவருபவர்கள். இவர்களுடன் குறிப்பிட்ட உள்ளாட்சிப் பகுதி மக்கள் அமைப்புகளும் இப்படி இயற்கைச் சீற்ற அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றன. அவற்றின் அறிவிப்புகளையும் முகநூல் முடக்கிவைத்து வருகிறது.
உச்சகட்டமாக, அரசாங்கத் துறைகளான தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறை ஆகியவற்றின் அறிவிப்புகளையும் ஸ்பேம் எனப்படும் கேடான செய்தி என்று முகநூல் அவற்றையும் முடக்கியுள்ளது.
வாசிங்டன் போஸ்ட் ஊடகம் முகநூலால் முடக்கப்பட்ட நாற்பது கணக்குகளின் விவரங்களை வெளியிட்டு, முகநூல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
முகநூல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எரின் மெக்பைக், இதுகுறித்து முகநூல் நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் விரைவில் உரிய தீர்பு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.