மார்க் ரூட் 
உலகம்

அலப்பறை கிளப்பாமல் கிளம்பிய தலைவர்!

Staff Writer

நம்மூர் தலைவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியாது...

‘ஒரே ஒரு குருக்கள் வர்றாரு வழியை விடுங்க’ என்ற ரேஞ்சுக்கு, நம்ம தலைவர்கள் வீட்டை விட்டு கிளம்பிட்டால் போதும், ஓடோடி வந்து சாலையில் குவிந்துவிடுவார்கள் காவலர்கள்.

ஆனால், இப்படியொரு எந்த அலப்பறையும் இல்லாமல், எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்.

நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். நேட்டோ அமைப்பு, இவரை நேட்டோவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்திருக்கிறது.

அதன் அடிப்படையில், வரும் அக்டோபர் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். அதனால், மார்க் ரூட் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் புதிய பிரதமராக டிக் ஸ்கூஃப் (Dick Schoof) தேர்வு செய்யப்பட்டார். டிக் ஸ்கூஃப் மற்றும் அந்த நாட்டு அமைச்சர்களுக்கு, நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், மார்க் ரூட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த விழாவின் இறுதியில் மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பிரதமர் அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். அப்போது அவர் எளிமையாக சைக்கிளில் சென்றார். இந்த வீடியோதான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு நாட்டின் பிரதமராக இருந்து, தானே அந்தப் பதவியை ராஜினாமா செய்து, அதைவிட பெரிய பொறுப்பான நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளராகப் பதவியேற்கவிருப்பவர் சாதாரண குடிமகனைப்போல சைக்கிளில் பயணிப்பது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடிக்கு சைக்கிளை பரிசளித்த மார்க் ரூட்

அவர், பிரதமர் பதவியிலிருந்தபோதும் அடிக்கடி சைக்கிளில் பயணித்திருக்கிறார். ஒருமுறை பதவியில் இருக்கும்போது பொருள்கள் வாங்க சைக்கிளிலேயே அவர் சென்ற செய்தி வைரலானது. தாம் மட்டுமல்லாது பிறரையும் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆர்வப்படுத்தும் அவர், நெதர்லாந்துக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கும் ஒரு சைக்கிளைப் பரிசாக வழங்கியிருந்தார்.

மிக முக்கியமான தருணத்தில் இப்படி எளிமையாக கிளம்பிய மார்க் ரூட்டை பத்தி நம்மூர் அரசியல்வாதிங்க என்ன நினைப்பாங்க...?

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின் தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram