டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பாதுகாப்புப் படையினர் 
உலகம்

பதறிய கூட்டம்...காதில் வழிந்த ரத்தம்... ஃபைட்...ஃபைட் என முழங்கிய டிரம்ப்!

Staff Writer

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவரின் வலது காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நேற்று பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவர், தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, டிரம்பின் வலப்புற காதை உரசி தோட்டா சென்ற நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர், டிரம்ப்பை பத்திரமாக மீட்டு வேனுக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தனது கையை உயர்த்தி ‘ஃபையிட்...பையிட்’ என முழக்கமிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்டவரை பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேடையிலிருந்து சுமார் 182 மீட்டரிலிருந்த கட்டடத்திலிருந்து கொலையாளி 4 முறை சுட்டதாகவும், இதில் கூட்டத்திலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில், தங்கள் நாட்டில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தன்னை பாதுகாப்பாக அழைத்து வந்த போலீசாருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.