தமிழ்த் தேசியப் பேரவை 
உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்- தமிழ் பொது வேட்பாளர் முயற்சி!

Staff Writer

இலங்கையில் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதிபர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கே அதே பதவியில் நீடித்துவரும் நிலையில், ஆகஸ்ட் கடைசி அல்லது செப்டம்பர் முதல்வாரம் வாக்கில் அதிபர் தேர்தல் நடத்திமுடிக்கப்பட வேண்டும்.

இதையொட்டி முன்னைய அதிபர்களான மகிந்த, கோட்டா பய ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் மீண்டும் போட்டியிடாவிட்டாலும், தங்களின் கை அதிகாரத்திலிருந்து போய்விடக்கூடாது என்றும் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களின் ஆசியோடு ரணில் போட்டியிடலாம் என முதலில் பேசப்பட்டது; ஆனால், அதற்கு ரணிலை ஆதரிக்கும் எதிர்க்கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ரணில் ராஜபக்சேக்களைக் கழற்றிவிடுவது எனும் முடிவுக்கு வந்தார்.

முன்னெப்போதும் இல்லாதபடி, ஈழத் தமிழ் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ரணில் அடிக்கடி பயணம்செய்து, அரசு நலத்திட்ட உதவி, பார்வையிடல் என மக்களைக் கவர முயற்சிசெய்கிறார்.

இதைப் போலவே, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியும், சிங்கள இனவாத இடதுசாரித் தீவிரவாத அமைப்பான ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியும் ஈழத்தமிழர் பகுதிகளில் தொடர் கூட்டங்களை நடத்திவருகின்றன.

ரணிலைப் பொறுத்தவரை, எந்த ஆட்சியிலும் அமைச்சராக இருக்கும் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் விடுதலைப்புலிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களின் கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

விடுதலைப்புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவாறாக உடைந்தநிலையில், ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் குடிமக்கள் அமைப்புகளும் சேர்ந்து தமிழ்த் தேசியப் பேரவை எனும் புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதற்கான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.

ஈழத்தமிழ் மக்களின் சிவிலியன் அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச்சபையும், நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சித்தார்த்தன் தலைமையிலான ப்ளாட், சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப், வேந்தன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள், சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பேச்சாளர்கள் சுரேஷ், நிலாந்தன் இருவரும், “ அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ் மக்கள் பொதுச்சபை பிரகடணம் செய்திருந்தது. அத்துடன் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கிறோம். வரும் ஆறாம் தேதி முறைப்படியான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். பின்னர் தேர்தல் அறிக்கை தயாரிப்பும் நடைபெறும்.” என்று கூறினர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு முன்னாள் நிர்வாகியின் மனைவியும் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகமும் இதில் இடம்பெறுமா என கேள்வி எழுந்தது. அவர் தற்போது வெளிநாடு சென்றிருப்பதால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் இலங்கைக்குத் திரும்பியதும் அவரையும் இதில் உள்ளடக்குவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் பேரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.