சீனா அதிவேக இணையம் 
உலகம்

1 நொடியில் 150 சினிமா அனுப்பும் அதிவேக இணைய வசதி... சீனாவில்!

Staff Writer

உலகத்திலேயே முதல் முறையாக, ஒரு நொடியில் 150 முழு நீளத் திரைப்படங்களை அனுப்பக்கூடிய திறன்படைத்த அதிவேக இணைய வசதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நொடியில் 1.2 டெராபைட்டுகள்=1,200 ஜிகாபைட்டுகள் வேகம் கொண்டதாக இது இருக்கும்.

அந்த நாட்டின் வடக்கில் உள்ல பீஜிங், நடுவில் உள்ள வூகான், தெற்கில் உள்ள குவாங்சௌ நகரங்களை இணைக்கும்படியாக, 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ஒளியிழை பதிக்கப்பட்டு இந்த இணையவசதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் இது அமைக்கப்பட்டுவிட்ட போதும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, கடந்த திங்களன்று முறைப்படி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹூவாய் டெக்னாலஜிஸ், சீன கல்வி, ஆராய்ச்சி இணையம்- செர்நெட் ஆகிய நான்கு நிறுவனங்களும் கூட்டாகச் செயல்பட்டு, இதை உருவாக்கியுள்ளன.

தற்போது உலக அளவில் நொடிக்கு 100 ஜிகாபைட்டுகள் வேக அளவுதான் இணையவசதி அளிக்கப்படுகிறது. அண்மையில் அமெரிக்காவில் ஐந்தாம் தலைமுறை இணையவசதியாக அறிமுகப்படுத்தப்பட்டதுகூட நொடிக்கு 400 ஜிகாபைட்டுகள் அளவிலானதே ஆகும்.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நொடிக்கு ஒரு டெராபைட்டு வேக அளவுக்கு இணையவசதியை உருவாக்குவதே கடினம் என்று கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், சீனத்தில் மிக அதிவேக இணையவசதி உருவாக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹூவாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் வாங் லீ இதுபற்றிக் கூறுகையில், ஒரு நொடியில் 150 முழு நீளத் திரைப்படங்களுக்கு இணையான தரவுகளை இதன் மூலம் அனுப்பமுடியும் என்றார்.