இங்கிலாந்தின் வடக்கு யார்க்சையரில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்த ரிஷி சுனக் 
உலகம்

ரிஷி சுனக் ஆட்சியின் கதி என்ன?

Staff Writer

பிரிட்டனை இந்தியப் பூர்வீக வாரிசான ரிஷி சுனக் தலைமையிலான பழைமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்) ஆண்டுவரும் நிலையில், இன்று அந்நாட்டில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

கீர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர் கட்சி (லேபர்) எதிரணியில் முன்னணியாக உள்ளது. 

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளைக் கொண்ட பிரிட்டனில் மொத்தம் 650 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 326 தொகுதிகளைப் பெறக்கூடிய கட்சி ஆட்சியை அமைக்கும்.

பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் கீர் ஸ்டாமர்

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10மணிவரை தொடரும். அதன்பிறகு சில மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.

முதலில் முன்னிலை நிலவரமும், இறுதியான முடிவு இந்திய நேரப்படி நாளை காலையில் தெரிந்துவிடும்.

இந்தத் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிருஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்கின் பழைமைவாதக் கட்சி தொடர்ந்து 14 ஆண்டுகளாக பிரிட்டனில் ஆளும் கட்சியாக இருக்கிறது. பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் உட்பட பல விவகாரங்கள் அரசாங்கத்துக்கு பாதகமாகவே இருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் தொழிலாளர் கட்சியே வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்றைய வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகணிப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.