இரசியாவுக்கு எதிராக உக்ரைன் நடத்தும் தாக்குதல்களுக்கு இன்னும் ஆயுதங்கள், தளவாடங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருக்கிறார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் உச்சி மாநாடு அந்நாட்டுத் தலைநகர் வாசிங்டனில் நேற்று தொடங்கியது. அதில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்துகொண்டார்.
அதில் பேசிய பைடன், அடுத்த வரவுள்ள மாதங்களில் நேட்டோ சார்பில் உக்ரைனுக்கு கூடுதலாக வான் பாதுகாப்புக் கருவிகள் உட்பட அதிகமான ஆயுதத் தளவாடங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார். குறிப்பாக, வான் தாக்குதலின்போது இடைமறிக்கக்கூடிய ஆயுதங்களை கூடுதலாகத் தரும்போது போரில் உக்ரைன் முன்னேறிச் செல்லும்; இரசியா தோற்பது உறுதி என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனுடன் போர் தொடுத்ததால் இரசியாவில் 3.5 இலட்சம் படையினர் பலியாகிவிட்டனர் என்றும் 10 இலட்சம் இரசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்றும் இரசிய அதிபர் புடின் 5 நாள்களில் போர் முடிந்துவிடும் என நினைத்தார்; ஆனால் இரண்டரை ஆண்டுகளாகப் போர் தொடர்கிறது; இதில் இரசியா வெற்றி பெறாது என்றும் பைடன் பேசினார்.