மத்திய கிழக்கு பகுதியில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள இரண்டு நகரங்களுக்கு தன்னுடைய விமான சேவையை ரத்துசெய்வதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பாலத்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் அந்நாட்டைச் சுடுகாட்டாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக பாலத்தீன ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா ஆயுதக் குழு அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டது. கடந்த வாரம் முழுவீச்சில் இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
பதிலுக்கு ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் பேஜர்கள், வாக்கிடாக்கிகளை வெடிக்கச்செய்து மிகவும் புதிய வடிவிலான தாக்குதலில் இஸ்ரேலின் உளவுப்படையான மொசாத் ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹிஸ்புல்லா இயக்கம் மேலும் மூர்க்கமாக பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் இப்படி போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், இஸ்ரேலின் டெல் அவிவ், லெபனானின் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுத்தப்படுகிறது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அங்கு நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சீரானதும் விமான சேவை வழக்கம்போல இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.