‘நேரத்துக்கு தூங்கிடுங்க… இல்லனா இந்த பிரச்னையெல்லாம் வரும்’ என பயமுறுத்தும் இந்த இலவச அட்வைசை பலரும் எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதற்கெல்லாம் சவால்விடும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
கட்டுமஸ்தான உடலுடன் சும்மா ஜம்முனு இருக்கும் 40 வயதாகும் ஜப்பானை சேர்ந்த டைசுகி ஹோரி, கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார். தன் வாழ்நாளை இரட்டிப்பாக்கும் நோக்கோடு அவர் இப்படி செய்வதாக கூறப்படுகிறது.
குறைவான நேரம் உறங்கினாலும் நிம்மதியாக உறங்குவதால் வேலைத் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஹோரி, இதற்காக மூளைக்குப் பல வருடங்கள் பயிற்சி அளித்து வந்ததாகக் கூறுகிறார்.
“சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் உடற்பயிற்சி செய்வது, காபி குடிப்பதால் தூக்கத்தைத் தவிர்க்கலாம். நீண்ட நேரம் தூங்குவதை விட, ஆழ்ந்த உறக்கம் அதிக உற்சாகத்தைக் கொடுக்கும்.” என்கிறார் ஹோரி.
2016ஆம் ஆண்டு குறைந்த நேரம் உறங்குவோர் சங்கத்தை ஏற்படுத்திய இவர், 8 மணி நேர தூக்கத்தை வெறும் 90 நிமிடங்களாகக் குறைக்க நான்கு வருடம் பயிற்சி செய்துள்ளார். அவர் தன்னுடைய தோல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.