சீமான் - விஜயலட்சுமி 
செய்திகள்

விஜயலட்சுமி புகார்: ஆஜராகாத சீமான் – காரணம் என்ன? வழக்கறிஞர் விளக்கம்!

Staff Writer

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதில் சமரசம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் திடீரென விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் பழைய புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். சீமானைக் கைதுசெய்யும்வரை தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தினர் சீமானுக்கு அழைப்பு ஆணை அனுப்பினர். ஆனால், வேறு ஒரு வழக்கில் ஈரோட்டுக்குச் சென்றதால், இன்று 12ஆம் தேதி சீமான் ஆஜராவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் சீமான் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் சீமான் தரப்பின் விளக்கத்தை அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர், “ சில பல காரணங்களால், சீமானால் இன்று ஆஜராக முடியவில்லை. அதற்கான காரணங்களை ஆய்வாளரிடம் கூறியுள்ளோம். அதற்குப் பதிலாக, வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜரானோம். சீமான் தரப்பில் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்துள்ளோம்.” என்றார்.

சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர்

மேலும், “2011இல் முடித்துவைக்கப்பட்ட அந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் இந்த விசாரணை நடக்கிறதா அல்லது தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் புதிதாக வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது பழைய வழக்கிலேயே பிரிவுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா என்பன உள்பட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளர் அளிக்கும்பட்சத்தில், ஆஜராகும்போது விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பைத் தருகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், இதுகுறித்து ஆலோசித்து, அடுத்த விசாரணைக்கான தேதி குறித்து எங்களுக்குத் தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார்." என்றும் சீமானின் வழக்கறிஞர் கூறினார்.