சென்னைப் பல்கலைக்கழகம் 
செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் பாரம்பரியம் மிக்க பல்கலைக்கழகம்!

Staff Writer

அரசியல் சார்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற சென்னை பல்கலைக்கழக சுற்றறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை சமூகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அத்துறை சார்பில் சமீபத்தில் ஒப்புதல் படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், "நான் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களிலும் உறுப்பினராக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்த போராட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன். முன் அனுமதியின்றி நீண்டகால விடுப்பு எடுப்பதோ, வகுப்புக்கு வராமலோ இருக்கமாட்டேன்" ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் இந்த விதிகளை மீறினால் துறைத்தலைவர் உடனே தங்களைப் படிப்பில் இருந்து நீக்கலாம் என்றும் ஒப்புதல் அளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை, சமூகவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் “மாணவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது” எனவும், “அப்படி மாணவர்கள் ஈடுபட்டால் உடனே, கல்வி பெறும் வாய்ப்பில் இருந்து நீக்கலாம் என துறைத் தலைவருக்கு அதிகாரமளித்தும்” உள்ளது. இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதிக்காமல் செயல்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது" என்று அவர் கூறியுள்ளார்.

பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் 73 துறைகள், 45 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதுதவிர 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 19 இளநிலை, 21 முதுநிலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.