நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்கள் குறி வைக்கப்படுவதாக திமுகவின் மாநிலங்களைவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” டெல்லி மசோதாவின்போது நாங்கள் எதிர்த்துப் பேசினோம். மணிப்பூரில் தற்போதும் வன்முறை நடக்கிறது. அதில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்கள் மீது குறிவைக்கின்றனர்.” என்று கூறினார்.
” அரசு என்ன செய்தது என்று பேசாமல், அதற்கு பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை முடக்குகின்றனர்.” என்றவர்,
” மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மிக முக்கியமான மசோதாக்களை குழப்பத்திற்கிடையே நிறைவேற்றியுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் எப்போதும் செய்வதுதான். மசோதா மீது விவாதம் நடத்தப்படுவதை பாஜக விரும்புவதில்லை.” என்றார்.
”மணிப்பூர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தோம். ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுவந்ததால் மணிப்பூர் பிரச்னை முடிந்துவிட்டதைப்போல மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இன்று வந்த செய்தியைப் பார்த்தால் தெரியும்... மணிப்பூரைச் சேர்ந்த 250 பேர் மியான்மர் எல்லையில் பதுங்கி வாழ்த்து கொண்டிருப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.
ஜான் விஸ்வாஸ் என்ற மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதில் 42 சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படை நோக்கமே, பல குற்றங்களுக்கான தண்டனையைக் குறைப்பது. பலவற்றை குற்றமே இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் போன்றவற்றின் பெயரை மாற்றியுள்ளார்கள். அந்தப் பெயர்களை மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளார்கள்.
பாதகமான மசோதாக்களை 3 நிமிடங்களில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. விவாதம் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது பாஜக அரசு. மக்களவை, மாநிலங்களவைகளில் ஒரு சட்டம் ஒரே நாளில் நிறைவேறிய வரலாறு கிடையாது. ஆனால், எந்த விவாதமும் நடத்தாமல் பாஜகவினர் நிறைவேற்றியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை அரசின் சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்வது சரியா? தவறா? என்பதை மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.
இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது நீட் தேர்வு முடிவுக்கு வரும். ஜெயலலிதா விவகாரம் குறித்து ஒன்றும் அறியாமல் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருக்கிறார் என்பதே தெரியவந்தது.
மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதன் மூலம் மத்திய பாஜக அரசு மிரட்டல் விடுக்கிறது” என்று திருச்சி சிவா கூறினார்.