செய்திகள்

கடன் வாங்கி தக்காளி பயிரிட்ட பெண் விவசாயி; திருடுபோன 60 தக்காளி மூட்டைகள்!

Staff Writer

கர்நாடகா மாநிலம் கோனி சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவரின் பண்ணையிலிருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலையும் பகுதிகளில் பருவமழை பெய்து கொண்டிருப்பதால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விளைச்சல் மற்றும் வரத்து காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது தக்காளியைப் போன்றே இஞ்சி, மிளகாய், காலிபிளவர் போன்ற காய்கறிகளின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

காய்கறிகள் அத்தியாவசிய பொருள் என்பதால், அவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் உள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயி தாரணியின் வயலிலிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது.

தாரணியும் அவரது குடும்பத்தினரும் கடன் வாங்கி இரண்டு ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அடுத்த வாரம் தக்காளியை அறுவடை செய்து பெங்களூர் சந்தைக்குக் கொண்டு செல்ல இருந்திருக்கின்றனர். இந்த சூழலில் தான் அவர்களின் வயலிலிருந்த 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை, கடந்த செவ்வாய் இரவு யாரோ திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக தாரணி ஹளேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், ‘இப்படியொரு வித்தியாசமான வழக்கை இப்போதுதான் பதிவு செய்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், தாரணியின் குடும்பத்தினர், தங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது, பெங்களூருவில் தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.