ஆளுநர் ஆர்.என். ரவி - சைலேந்திர பாபு 
செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்: கேள்வி மேல் கேள்வி கேட்ட ஆளுநர்!

Staff Writer

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதேபோல் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகவும் பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்த கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அதற்கான காரணங்களும் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான நியமன அறிவிப்பினை எப்படி வெளியிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள ஆளுநர், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நியமனம் தொடர்பாக செய்தித்தாள்களில் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என்றும், நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் கேட்டுள்ளார்.

அதேபோல், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபுவுக்கு 61 வயது பூர்த்தி ஆகிவிட்டது. எனவே இதில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்று கூறி, தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநரின் கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.