ஆர்.பி. உதயகுமார் 
செய்திகள்

மாநாட்டைக் குறை சொல்ல முடியாமல் புளியோதரையைக் குறை சொல்கின்றனர்! – ஆர்.பி. உதயகுமார்

Staff Writer

மதுரை அதிமுக மாநாட்டை குறை சொல்ல முடியாததால், புளியோதரை தோல்வியை குறை சொல்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக மாநாட்டில் அதிகப்படியான உணவு வீணாக்கப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியது, "கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மாநாட்டு வருகைதந்த அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் வழிமாற்றிவிட்டனர். இதனால், எங்களது கட்சியின் தொண்டர்கள் பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தித்தான், மாநாட்டுக்கு வரவே முடிந்தது.

காட்டாற்று வெள்ளம் போல் வந்த வெள்ளத்தை கடலில் சேர்ப்பது போன்ற முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால், காவல்துறை அதற்கு முட்டுக்கட்டைப் போட்டது. எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை மட்டும் ஆளுங்கட்சியின் உத்தரவை மீறி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் 50 லட்சம் பேர் மாநாட்டுக்கு வந்திருப்பார்கள். இருப்பினும் காவல்துறையின் தடையை மீறித்தான் 15 லட்சம் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.” என்றவரிடம், மாநாட்டில் உணவு வீணாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்.

”பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாயுள்ளம் கொண்டவர். அவரது வீட்டுக்குச் சென்றால்கூட, காபி குடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பார். மனிதநேயத்துக்கு சொந்தக்காரர். மாநாட்டுக்கான உணவு விசயத்தில் அவர் தனிக்கவனம் செலுத்தினார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். மாநாட்டு வெற்றியை இந்த உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மாநாட்டின் சிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், வீரத்தமிழரின் எழுச்சி உரையை உலகமே பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு கரும்புள்ளியாக உணவு விஷயத்தை மாற்றி, அதை வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.பத்து லட்சம் பேருக்கு செய்த உணவை, எல்லோருக்கும் வழங்கப்பட்ட பின்னர், பாத்திரங்களில் மிச்ச மீதி இருந்த உணவை மிகைப்படுத்தியுள்ளார்கள். சில நூறுபேர் கலந்து கொள்ளும் வீட்டு விஷேசங்களிலேயே உணவு பரிமாறுவது பெரிய விஷயமாக இருக்கும். மாநாட்டிற்கு வந்த பதினைந்து லட்சம் பேருக்கு குடிநீர், உணவு கொடுப்பது அவர்களை திருப்பி அனுப்பினோம். அப்போது நடந்த சில விஷயங்களை ஊடகத்தினர் பெரிது படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

1 லட்சத்து 10 ஆயிரம் கிலோவுக்கு மேல் சமையல் செய்தோம். மூன்று இடங்களில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டது. கிட்டதட்ட 750 அடுப்புகளில் உணவு சமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அவசர கதியில் எதாவது நடந்திருக்கலாம். உணவு வீணாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மாநாட்டு வெற்றியை குறை சொல்வதற்கு யாருக்கும் எந்த விஷயம் கிடைக்கவில்லை. அதனால் புளியோதரை தோல்வியை மட்டும் இன்று பேசிக் கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகள், அவதூறுகள், பழிசொற்கள் எதுவும் எடுபடாது.” என்றார்.