ஆண் – பெண் உறவு சிக்கல் தினந்தோறும் புதுப்புது வடிவமெடுப்பதை நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளை வைத்துப் புரிந்து கொள்ளலாம்!
பெங்களூரில் வசிக்கும் இளம்பெண்ணுக்கு, கடந்த 2019 டிசம்பரில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த 28 நாட்கள் மட்டுமே கணவன்- மனைவி இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். பின்னர், மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அப்பெண்ணின் கணவர் ஆன்மிக அமைப்பு ஒன்றின் காணொளிக் காட்சிகளையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் மனைவியுடன் உடல் ரீதியான தொடர்புக்கு மறுத்துள்ளதாகவும் புகாரில் கூறி இருந்தார். ‘அன்பு என்பது உடல் சாந்தது அல்ல; மனம் சார்ந்தது’ என்றும் கூறிய கணவர், ஆன்மிக சொற்பொழிவுகளைப் பார்க்கும்படியும் மனைவிக்குத் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர், இந்திய தண்டனை சட்டம் 498A (வரதட்சணை தடைச் சட்டம்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குடும்பநல நீதிமன்றத்திலும் அந்த பெண் மனுத்தாக்கல் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார். அடுத்து தன்னுடைய கணவர் மீது குற்றவியல் வழக்கையும் தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருக்கிறார்.
இதற்கிடையே, தன் மீதும் தன்னுடைய பெற்றோர் மீதும் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை தடைச் சட்டத்தை எதிர்த்து, அந்த பெண்ணின் கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, “கணவர் உடலுறவு கொள்ள மறுத்தால் மனைவி விவாகரத்து பெறலாம். கணவர் உடலுறவு கொள்ள மறுப்பது இந்து திருமண சட்டத்தின் படி(1955) கொடுமையானது. ஆனால் இது இந்திய தண்டனை சட்டம் 498A-வின் வரையறையில் வராது. இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகத்தான், பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. அதனால், கணவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்க முடியாது.” என உத்தரவிட்டுள்ளார்.
அதெல்லாம் சரி.. உடல் ரீதியாக உறவு கொள்ள விருப்பம் இல்லையென்றால் பிரம்மச்சாரியாக இருந்து விட்டுப் போகலாமே? எதற்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும்? ஏன் இந்த தேவையில்லாத ஆணியை அந்த இளைஞர் பிடுங்கினார்?