தமிழ் நாடு

ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

Staff Writer

சென்னையைச் சேர்ந்த ஏ ஆர் பச்சாவட் என்ற வணிக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்களது நிறுவனம் ஹான்ஸ் இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.

ஹான்ஸ் மென்று திண்ணும் வகையிலான பொருள் தான் என்றும், இதற்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள நிறுவனம், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஹான்ஸ் தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறி பறிமுதல் செய்து அழித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதை விற்பனை செய்வது சட்டபூர்வமானது என்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் இதற்கு பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. விசாரணையின்போது, அரசு தரப்பில் ஹான்ஸ்சில் 1.8 சதவீதம் நிக்கோடீன் கலந்திருப்பதாகவும், இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொது மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தடை செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் தடை விதிக்கும் முன்பு உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், தொழில் அல்லது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், அந்த உரிமையானது. அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

பொது சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், குடிமகனின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், மேலும் எந்தவொரு புகையிலை தயாரிப்பு பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால், அரசு தடை விதிப்பது நியாயமானதுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். எனவே ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.