வேங்கைவயல் வாக்குச்சாவடி 
தமிழ் நாடு

வேங்கைவயல்: காலையில் புறக்கணிப்பு; மாலையில் வாக்களிப்பு!

Staff Writer

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்த வேங்கைவயல் கிராம மக்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென வேங்கைவயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து, தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், திருச்சி வருவாய்த் துறை அதிகாரிகள் வேங்கவயல் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேங்கைவயல் கிராம மக்கள் சில கோரிக்கைகள் வைத்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல், குடியிருக்க மாற்று இடம், தொழில் வாய்ப்பு போன்ற கோரிக்கைகள் வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.