எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய்ப் படலம் 
தமிழ் நாடு

வடசென்னை- 20 சதுர கி.மீ. பரப்பில் எண்ணெய்ப் படலம்!

Staff Writer

புயல் மழை காரணமாக சென்னை எண்ணூர் கொற்றலை ஆற்றின் கழிமுகப் பகுதியில் சுமார் 20 சதுர கி.மீ. பரப்பில் எண்ணெய்ப் படலம் மிதந்து, அப்பகுதியில் மீனவர்கள், சுற்றுச்சூழலுக்குப் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர். அதன்பிறகு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ” இந்த எண்ணெய்ப் படலம் தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்க வேண்டும். குறிப்பாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் -சிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழைநீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் எண்ணையுடன் தண்ணீர் கலந்து தேங்கி இருந்தது. அதிலிருந்து இந்த எண்ணெய் வந்திருக்கலாம். நாங்கள் ஆய்வு நடத்தியபோது வெளியிலிருந்து அங்கு வந்த மழை நீரில் எண்ணெய்ப் படலம் ஏதும் இல்லை. சிபிசிஎல் அலுவலகத்திற்குள் தேங்கி இருக்கும் மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டபோது தரையில் படிந்திருந்த எண்ணெயும் அதனுடன் சேர்ந்து வெளியேறியிருக்கலாம். பிறகு மெதுவாக பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்கலாம். இப்படி எண்ணெய் மிதப்பதை அகற்றும்படி சிபிசிஎல் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழை நீர் கால்வாயுடன் கலக்கும் இடத்தில் உறிஞ்சிகளை அளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறோம்.” என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனும் அந்த இடத்தை இன்று பார்வையிட்டார். 

முன்னதாக, கடந்த இரண்டு நாள்கள் கடலோரக் காவல் படை நடத்திய ஆய்வில்தான் 20 சதுர கி.மீ. பரப்புக்கு எண்ணெய்ப் படலம் மிதந்துகொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக எண்ணெய்க் கரைப்பான் பொடியை மூன்று ஹெலிகாப்டர்கள் மூலம் தூவும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.