எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

மேகதாது- கர்நாடக அரசுடன் தி.மு.க. திரைமறைவு நாடகம்: எடப்பாடி

Staff Writer

கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தி.மு.க. அரசு திரைமறைவு நாடகம் நடத்திக்கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது விவகாரத்தைக் கொண்டுபோய்விட்டது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தங்களது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கவோ, அதுபற்றி விவாதப் பொருளில் கொண்டுவரவோ அனுமதித்ததில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28ஆவது கூட்டம் டெல்லியில் 1-2-2024 அன்று நடைபெற்றபோது, மேகதாது அணை விவகாரம், கூட்டத்தின் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதுகுறித்துப் பேசவேண்டும் என்று கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ” ஏற்கெனவே விவாதப் பொருள் பட்டியலில், மேகதாது அணை குறித்து இருப்பதை அறிந்த விடியா திமுக அரசும், கலந்துகொண்ட அதிகாரிகளும் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?

விதிகளுக்குப் புறம்பாக மேகதாது பிரச்சனை குறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் பிரச்சனை எழுப்பியபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்துகொண்டது ஏன்?

விவாதப் பட்டியலில், மேகதாதுவை சேர்க்காமல் விட்டிருந்தாலோ, ஆட்சேபனை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தாலோ, 1.2.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது பிரச்சனை நீர்வளக் கமிஷனின் பார்வைக்குச் சென்றிருக்காது.” என்றும், 

”திமுக-வும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்திற்கு காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்னையையும் அ.தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

திமுக - காங்கிரஸ் திரை மறைவு நாடகத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டு, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று இந்த திமுக அரசை கடுமையாக எச்சரிக்கிறேன்." என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.