வால்பாறை காட்டாற்றில் குளித்த 5 மாணவர்கள் பலி 
தமிழ் நாடு

சுற்றுலாவில் துயர் - ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் 5 பேர் பலி

Staff Writer

கோவையிலிருந்து சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் ஆற்றில் குளித்தபோது, நீரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

கோவை, மலுமிச்சம்பட்டியில் எல்.என்.எம்.வி. கலை- அறிவியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர், நேற்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களையும் பார்த்துவிட்டு, திரும்பும்வழியில் சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்தில், குளிப்பதற்காக இறங்கினர். ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்றபோதும், அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மகிழ்ச்சியாக குளியல் போட்டனர்.

அவர்களில் வினித் என்பவர் நீர்ச் சுழலில் சிக்கிக்கொண்டுள்ளார். அவரின் அலறலைக் கேட்டு காப்பாற்ற முயன்ற நண்பர்களும் அடுத்தடுத்து நான்கு பேர் நீரில் சிக்கிக்கொண்டனர்.

மகிச்சியாக சுற்றுலா சென்றுவிட்டு வந்த மாணவர்கள், தங்கள் கண்முன்னால் நண்பர்கள் தண்ணீருக்குள் அடித்துச்செல்லப்படுவதைக் கண்டு துடித்தனர்.

ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தகவலின்பேரில் அங்கு சென்ற வால்பாறை தீயணைப்பு மீட்புப் படையினரும் மாணவர்களைத் தேட முயன்றனர். ஆனால், முதலில் ஒரு மாணவரின் சடலம் மட்டுமே கிடைத்தது.

பொதுமக்களும் உதவ மீட்புப் படையினர் மற்றொரு மாணவரின் உடலையும் மீட்டனர்.

ஒரு மணி நேரத்தில் ஐந்து மாணவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இறந்துபோனவர்களில் நபில் (20) கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர். சரத் (20), வினித்(20), தனுஷ் (20), அஜய் (20) ஆகியோர் கிணத்துக்கடவச் சேர்ந்தவர்கள். வினித், தனுஷ் இருவரும் சகோதரர்கள். உயிரிழந்த சரத் பொறியியல் பட்டப்படிப்பும், மற்ற நான்கு பேரும் பி.எஸ்.சி. பயோடெக் இறுதி ஆண்டும் படித்துவந்துள்ளனர்.

இறந்த மாணவர்களின் உடல்கள் முதலில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் கூராய்வுக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டன. தகவல் அறிந்துவந்த பெற்றோரும் குடும்பத்தினரும் பிள்ளைகளின் உடல்களைப் பார்த்து கதறியழுத காட்சி, அங்கிருந்தோரைத் துயரத்தில் ஆழ்த்தியது.