விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம்் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன், தங்கப்பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைகள், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.