பி.ஆர்.பாண்டியன், தமிமுன் அன்சாரி உட்பட்டவர்கள் கைதாகி போலீஸ் வேனில் அழைத்துச்செல்லப்பட்டனர்.  
தமிழ் நாடு

சிப்காட் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போராடியவர்கள் கைது!

Staff Writer

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக பயிர்நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். அவர்களில் 20 பேரை இந்த மாதம் முதல் வாரம் காவல்துறையினர் கைதுசெய்து, வேலூர், சென்னை, கடலூர், பாளையங்கோட்டை என வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள சிறைகளில் அடைத்தனர். அவர்களில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டக் காவலும் போடப்பட்டது. அதற்கு பல கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அருள் என்பவரைத்தவிர மற்ற 6 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் விலக்கப்பட்டது. இந்நிலையில் அருளை குண்டர் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கவும் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்யவும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. 

வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மீறி போராட்டத்தில் ஈடுபட்ட காவிரிப் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் நாகை முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, இயக்குநர் கௌதமன், அறப்போர் இயக்கம் வெங்கடேசன் உட்பட பலரும் கைதுசெய்யப்பட்டனர். 

ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அரங்கில் தடுத்து வைக்கப்பட்டனர். கௌதமனை காவல்துறையினர் முறையில்லாமல் நடத்தியதாகக் கூறி, அவர்கள் மதிய உணவைப் புறக்கணித்தனர். 

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலரையும் காவல்துறையினர் போராட்ட இடத்துக்கு அனுமதிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.