எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

இன்றும் சட்டப்பேரவையைப் புறக்கணித்தது அ.தி.மு.க.!

Staff Writer

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க. இரண்டாவது நாளாக இன்றும் புறக்கணித்தது. 

பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரிக்குப் பிறகு நேற்று முன்தினம் பேரவைக் கூட்டம் மீண்டும் தொடங்கியது. நேற்று, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கள்ளச்சாராயச் சாவுகள் தொடர்பாக பிரச்னையை எழுப்பினர். பேரவைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி, அவர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்த அவைத்தலைவர் அப்பாவு, அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் உட்பட்ட சிலர் குண்டுக்கட்டாக அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க.வினரின் கருத்துகளை எடுத்துவைக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி அவைத் தலைவரும் அவர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் அதை ஏற்க அ.தி.மு.க.வினர் மறுத்துவிட்டனர். 

இன்று மூன்றாவது நாளாக அவை கூடியபோது முதலில் வினா விடை நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. உடனே எழுந்த அ.தி.மு.க.வினர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பினர். அரசு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவைத்தலைவர் அப்பாவு கேள்வி நேரம் முடிந்ததும் பேசலாம் எனக்கூறி மறுத்துவிட்டார். 

அதையடுத்து, அவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். வெளியே வந்த அவர்கள், இன்று முழுவதும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர்.