சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழக ஆளுநரிடம், பாஜக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜகவினர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, ஆளுநரிடம் இரண்டு கடிதங்களை அவர்கள் கொடுத்தனர். அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர்பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரிடம் கடிதங்களைக் கொடுத்த பின்னர், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உலகம் முழுவதும் வாழும் 130 கோடி இந்துக்களைப் புண்படுத்தும் விதமாக உதயநிதி பேசியுள்ளார். சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுவதற்கு இந்துக்களை ஒழிப்போம் என்று அர்த்தம். இந்து தெய்வங்களை வணங்குபவர்களை எதிர்ப்போம், ஒழிப்போம் என்பதுதான் பொருள். தமிழகத்தில் இருக்கிற ஏறத்தாழ 8 கோடி இந்துக்களை ஒழிப்போம் என்றுதான் பொருள்.
வன்முறை நஞ்சை விதைக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி வகிக்க தகுதியில்லை. எனவே, அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எங்களுடைய மாநிலத் தலைவரின் கடிதத்தை, ஆளுநரிடம் கொடுத்து வந்திருக்கிறோம். அதேபோல், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. இந்து மதத்துக்கு எதிராகவோ, மத உணர்வுகளுக்கு எதிராகவோ செயல்படமாட்டோம் என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதிகாரிகளே உறுதிமொழி எடுக்கும்போது, அந்த துறையின் அமைச்சர் எவ்வளவு பொறுப்புள்ள நபராக இருக்க வேண்டும்.
சனாதனம் என்ற தர்மம், இந்து மத ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் சென்று அமர்ந்திருக்கிறார். அந்த மாநாட்டில் அவர் கலந்துகொண்டது தவறு எனக்கூறி, அவர் மீதும் நடவடிக்கை எடுத்து, பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, மாநிலத் தலைவரின் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்து வந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.