உதகையில் நீர்ப் பனிப் பொழிவு 
தமிழ் நாடு

உதகையில் தாமதமான நீர்ப் பனிப் பொழிவு, கடும் குளிர்!

Staff Writer

நீலகிரி மாவட்டத்தில் நீர்ப் பனிப் பொழிவு தாமதமாக விழத் தொடங்கியுள்ளநிலையில், உதகையில் குளிரின் கடுமை அதிகரித்துள்ளது. 

மாவட்டத்தில் வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் உறைபனி பிப்ரவரி மாதம்வரை நீடிக்கும். இந்த ஆண்டில் உறைபனிக்குப் பதிலாக கடும் மேகமூட்டமும் அடிக்கடி பெய்யும் மழையுமாக வானிலை நிலவுகிறது. நீர்ப்பனிப் பொழிவும் தாமதமானது. 

நேற்று காலையில் உதகையில் தாவரவியல் பூங்கா, சந்தைப் பகுதி, குதிரைப்பந்தய மைதானம், நீர்நிலைகளை ஒட்டிய புல்வெளிகள், காந்தள், தலைக்குந்தா ஆகிய இடங்களில் நீர்ப்பனி வீழ்ச்சி அதிகமாகக் காணப்பட்டது.  

தாவரவியல் பூங்காவில் வழக்கத்துக்கும் அதிகமான நீர்ப்பனிப் பொழிவால், நடைப்பயிற்சி சென்றவர்கள் அவதி அடைந்தனர். இரவிலும் அதிகாலையிலும் நீர்ப்பனிப் பொழிவால் கடும் குளிர் வாட்டுகிறது. மக்கள் தீமூட்டி குளிர்காயத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் உறைபனியின் தாக்கம் ஏற்படக்கூடும் எனும் நிலையில், இப்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.