தமிழ் நாடு

இராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. கிணறு அமைப்பதா? - அ.தி.மு.க., பா.ம.க., சூழல் அமைப்புகள் எதிர்ப்பு!

Staff Writer

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. பெட்ரோலியக் கிணறுகளைத் தோண்ட அனுமதி தரக்கூடாது என அ.தி.மு.க. முதலிய கட்சிகளும் சூழல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

“ இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் முந்தைய ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு. ஆகவே கடந்த காலத்தைப்போல அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. தமிழகத்தின் வளத்தைப் பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்குத் துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டும்.”

பா.ம.க. நிறுவனர் இராமதாசு:

” ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரியின் காரைக்கால், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் ஓ.என்.ஜி.சி உரிய அனுமதி பெற்றுவிட்டது. அடுத்தக்கட்டமாக இப்போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமது கோரி விண்ணப்பித்திருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டிய  கட்டாயம் ஏற்படும். அதன்பின் தமிழகத்தின் பெரும்பகுதி பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது.”

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்: 

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரகள் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் இயற்கை வளங்களின் நலன் கருதி புதிதாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். மேலும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.”