“இனி பா.ஜ.க.வினருடன் கூட்டணி இல்லை” என அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான ஜெயக்குமார் தினந்தோறும் பேட்டி அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனை நடைபெற்றுவருகிறது. கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி கூட்டணி குறித்து இந்த இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களின் பேட்டிகள் முரணாகவே இருக்க, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. (இவர்களுடன் காங்கிரஸ், தி.மு.க., தே.முதி.க.வைச் சேர்ந்த கட்சிகளின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்.)
’அண்ணாமலை தட்டித் தூக்கிய தலைவர்கள்’ என பா.ஜ.க.வினர் சமூக ஊடகங்களில் பெருமையாகப் பரப்பிவரும் அந்தத் தலைவர்கள் யார் யாரென்று பார்ப்போம்!
கரூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல்
கோயம்புத்தூர் முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி
பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ரத்தினம்
சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி
அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.கந்தசாமி
தேனி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ஜெயராமன்
வலங்கைமான் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் கோமதி சீனிவாசன்
வேடசந்தூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.வாசன்
ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தங்கராஜ்
புவனகிரி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள்
பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருநாதன்
காங்கேயம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன் அவர்கள்
திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழழகன்
காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன்
கொளத்தூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரோகிணி
முன்னாள் சிதம்பரம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.கள் பா.ஜ.க.வில் இணைந்தது பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “ பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சியில் செயல்படாமல் இருந்தவர்கள்.” என்று ஒசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அவரைப் போலவே, அமித் ஷாவின் கருத்து பற்றி அ.தி.முகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமாரும், ”பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது.” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“கூட்டணிக் கதவு திறந்தே இருக்கும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது, டெல்லி இணைப்பு நிகழ்வு ஆகியவற்றின் மூலம், பா.ஜ.க. கூட்டணியை நிராகரிக்கும் அ.தி.மு.க.வுக்கு பூடகமான ஒரு செய்தியை உணர்த்தியிருக்கிறதோ எனும் கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.
அதாவது, கூட்டணிக்கு அ.தி.மு.க. கட்சி வராமல் போகலாம்; அந்தக் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்; அதைத் தடுக்கமுடியுமா என்பதே கதவுத் திறப்பு என்பதன் பொருளாக இருக்கும் என்பது அவர்களின் வியாக்யானம்.
இந்த தர்க்கத்தை மறுப்பதற்கு இல்லை!