எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1958இல் சேலத்தில் பிறந்த இந்திரா செளந்தர்ராஜன் நாற்பது ஆண்டுக்கு மேலாக மதுரையில் வசித்து வந்தார். இவரின் முதல் படைப்பான 'ஒன்றின் நிறம்’ என்ற குறுநாவல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது. தொடக்கக் காலத்தில் மர்மக்கதைகளை எழுதியவர், பின்னர் அமானுஷ்ய நாவல்களை எழுதத்தொடங்கினார். ஆனந்த விகடனில் வெளிவந்த ‘கோட்டைபுரத்து வீடு’ என்ற தொடரின் மூலம் பிரபலமானார். இதுவரை இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிருங்காரம், அனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும், என் பெயர் ரெங்கநாயகி, விடாது கருப்பு, மர்ம தேசம், ருத்ர வீணை போன்ற 19 தொலைக்காட்சி தொடர்களும் எழுதியுள்ளார்.
சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.